பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்த மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டதற்கு பாரதிராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிராக கருத்து தெரிவித்த, நடிகர் மன்சூர் அலிகானை சென்னை சூளைமேட்டில், சேலம் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்று அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தமிழர் கலை இலக்கியப் பண்பாட்டுப் பேரவையின் சார்பாக பேசிய இயக்குனர் பாரதிராஜா உரிமைக்காக போராடும் மக்களை மிரட்டி கைது செய்வது தவறு என்றார்.
மேலும் சேலம் பசுமை வழிச்சாலை பற்றி மன்சூர் அலிகான் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியது தவறுதான். மன்சூர் தன் சுயநலத்திற்காக அப்படி பேசவில்லையே, நாட்டுமக்களின் நலனிற்கு தானே அப்படி பேசினார்.
உரிமைக்காக போராடிய மன்சூர் அலிகானை கைது செய்துள்ள போலீஸார், பெண்களைத் தரக்குறைவாகப் பேசிய எஸ்.வி.சேகருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து பாதுகாக்கிறார்கள்.
எனவே மன்சூர் அலிகானை விடுதலை செய்யுங்கள். தமிழக மக்களுக்கு துரோகம் இழைக்கும் எஸ்.வி.சேகரைக் கைது செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என பாரதிராஜா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.