இந்தியத்திருநாட்டின் 75 வது சுதந்திரதினவிழாவை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக மத்திய அரசு 75 வாரங்களை சுதந்திரத்தின் அமுதவிழாவாக' (Azad Ka Amarit Mahotsav) அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், சுயசார்பு மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கோடு பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தவுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி, மேன்மை, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று சேரும் நோக்கத்தில் இந்தவிழா கொண்டாடப்படுகிறது.
இந்த மகத்தான முன்னெடுப்பின் அங்கமாக இராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் கீழ் (DRDO) சென்னை ஆவடியில் இயங்குகின்ற போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (CVRDE) தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலம் முழுதும் பல்வேறு முக்கிய நகரங்களிலும், கல்விநிறுவனங்களிலும் இராணுவத் தளவாடக் கண்காட்சிக்கும், சிறப்பு கருத்தரங்கங்களுக்கும் ஏற்பாடு செய்துள்ளது.
முத்தாய்ப்பாக, 13 டிசம்பர் 2021 அன்று காலை 10 மணியளவில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் இராணுவத் தளவாடக் கண்காட்சியை, போர் ஊர்திகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன இயக்குனரும், முதுநிலை விஞ்ஞானியுமான திரு. பாலமுருகன் அவர்கள் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மற்றும்தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குனர் Dr.S. செளந்தரராஜ பெருமாள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கண்காட்சியில் ஒரு அங்கமாக தூய்மையான இந்தியாவை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் "தூய இந்தியா இயக்கம்- Swach Bharath Abhiyan" செயல்முறை செய்து காட்டப்பட்டது
CVRDE இயக்குனர் திரு V. பாலமுருகன் தனது உரையில், இராணுவத்திற்குத் தேவையான கனரக போர் ஊர்திகள் ஆராய்ச்சி செய்வதிலும், வடிவமைப்பதிலும் பெரும்பங்கு வகித்து வருவது குறித்தும், உள்நாட்டிலேயே தயாரித்த, மேம்பட்ட தொழில் நுட்பங்களைக் கொண்ட, உலகத்தரம் வாய்ந்த ராணுவ பீரங்கியான 'அர்ஜுன்1 12 இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது குறித்தும், 118 பீரங்கிகள் (7523 கோடி மதிப்பு) உள்நாட்டிலேயே தயாரிப்பது குறித்தும் கூறினார்.
தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நிர்வாக இயக்குனர் Dr.S.செளந்தரராஜ பெருமாள் தனது உரையில் வளர்ந்துவரும் இந்தியாவிற்கு இளைய தலைமுறையினர் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளையும் அதை நிறைவேற்றத் தேவையான பண்புகளை வளர்த்துக் கொள்வது குறித்தும் குறிப்பிட்டார்.
பள்ளி மாணவர்களும், பொது மக்களும் கண்டு களிக்கும் வண்ணம் இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி, இராணுவ மேம்பாடு ஆகியவற்றை பறைசாற்றும் விதமாக இந்தக் கண்காட்சி டிசம்பர்13 முதல், ஒருவாரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.