நடிகர் விஜய் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில் அதில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பிரபல தமிழ் நடிகர் விஜய் நீண்ட காலமாக அரசியல் வருகைக்காக ஆயத்தமாகி வந்த நிலையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியின் பெயரை அறிவித்து அரசியலில் அதிகாரப்பூர்வமாக களம் இறங்கியுள்ளார்.
தற்போது இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ள விஜய் அந்த படங்களை முடித்த பின்பு வேறு படங்கள் எதிலும் நடிக்க ஒப்பந்தம் போடவில்லை. இந்த படப்பணிகளுக்கு நடுவே கட்சிப் பணிகளையும் மும்முரமாக கவனித்து வருகிறார் விஜய். விஜய்யின் அரசியல் வருகையால் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் அலுவலகம் பிஸியான ஏரியாவாக மாறியுள்ளது.
சமீபத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், கட்சி முக்கியஸ்தர்களோடு கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார் விஜய். அதில் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என பேசி முடிவு செய்யப்பட்டுள்ளதாம். உறுப்பினர் சேர்க்கைக்கான முன் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன.
கட்சி உறுப்பினர் சேர்க்கையை டிஜிட்டல் முறையில் நடத்துவதற்காக பிரத்யேக செயலி ஒன்றும் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த செயலி மூலம் நிர்வாகிகள் தங்கள் உறுப்பினர் சேர்க்கையை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளதாம். எந்த நிர்வாகிகள் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கிறார்களோ அவர்களுக்கு கட்சியில் முக்கியமான நிர்வாக பொறுப்புகளை வழங்க கட்சி திட்டமிட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.