வாக்குப்பதிவிற்கு முன்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க போடப்படும் மாதிரி வாக்குகளை பல பூத்களில் அழிக்காமல் விட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் மீது புகார் எழுந்துள்ளது.
எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தின் பலக் குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம் தேர்தலுக்கு முன்னர் எதிர்க்கட்சிகளைக் கட்டம் கட்டி தேர்தல் ஆணையம் செய்த சோதனைகளே.
வாக்குப்பதிவு நாளன்று பல பூத்களில் வாக்கு எந்திரங்கள் சரியாக இயங்காததால் வாக்குப்பதிவு தாமதமானது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் இப்போது அனைவரையும் அதிர்ச்சியாக்கும் விதமாக மாதிரி வாக்குகளை சில வாக்குச்சாவடிகளில் அழிக்காமல் விட்டதாகவும் அவை வாக்குப்பதிவோடு கலந்துவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடலூர் மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை விட எந்திரத்தில் பதிவான வாக்குகள் அதிகமாக காட்டியுள்ளன. இதனால் தேர்தல் அதிகாரிகளும் வேட்பாளர் முகவர்களும் குழம்பியுள்ளனர். அதன் பின்னர் வாக்குப்பதிவிற்கு முன்னர் நடத்திய மாதிரி வாக்குப்பதிவு எண்ணிக்கையை அழிக்காமல் விட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதனால் வாக்கு இயந்திரங்கள் வைக்கும் இடங்களில் வேட்பாளர்களுக்கும் தேர்தல் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. அதன் பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தலையிட்டு சம்மந்தப்பட்ட பூத்களில் வாக்கு எண்ணிக்கையின் போது அதை நீக்க வழிசெய்கிறோம் என உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வர வர தேர்தல் ஆணையத்தின் மீது பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கை குறைந்துள்ளது.