பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, "அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கலையும் உருவி எடுத்துவிட்டு தான் தமிழ்நாட்டை விட்டு போவேன்," என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி, "அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒரு புல்லை கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்பது ஒரு கற்பனை. அது நடக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்," என்றும் பதிலளித்தார்.
"மேலும் முதல்வர் குறித்து அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஆர்.எஸ்.பாரதி, ஒரே மேடையில் என்னுடன் அண்ணாமலை விவாதிக்க தயாரா?" எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.
மேலும், அதிமுக குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அதிமுகவில் இருக்கும் யாரை பற்றியும் நாங்கள் இப்போது விமர்சனம் செய்ய விரும்பவில்லை. அவர்களே பாவம், நெருக்கடியில் இருக்கிறார்கள்," என்றும் தெரிவித்தார்.
நடிகர் விஜய்க்கு வாக்கு சதவீதம் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்றும் கூறினார். பிரசாந்த் கிஷோர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, "அவரே பீகாரில் டெபாசிட் வாங்கவில்லை," எனவும் கருத்து தெரிவித்தார்.