இந்திய கூட்டணி வேட்பாளராகிய என்னை எதிர்த்து நிற்க பயந்து கோவைக்கு ஓடிவிட்டார் என்று காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்தார்.
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் அறிவித்தார்.
அதன்படி தேர்தல் விதிகள் நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியின்போது, அவர் கூறியதாவது:
பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் நாடாளுமன்ற தொகுதியைச் சேர்ந்தவர். அவர் கடந்த முறை கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். பாஜக அவர் தலைமையில் தமிழகத்தில் வளர்ந்திருக்கிறது என்றால் அவர் சொந்த தொகுதியில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன்? கரூர் தொகுதியில் போட்டியிட்டால் டெபாசிட் போய்விடும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால் தான் இந்திய கூட்டணி வேட்பாளராகிய என்னை எதிர்த்து நிற்க பயந்து கோவைக்கு ஓடிவிட்டார் என்று தெரிவித்தார்.