Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்கள்: என்ன நன்மை? அண்ணாமலை கேள்வி..!

Advertiesment
annamalai Mk stalin

Mahendran

, வெள்ளி, 17 அக்டோபர் 2025 (17:13 IST)
ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக ஒரு நபர் ஆணையம் அமைத்த தமிழக முதல்வரின் அறிவிப்பை, பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக அரசு இதற்கு முன்னர் அமைத்த எண்ணற்ற குழுக்கள் மற்றும் ஆணையங்களின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அண்ணாமலை, இந்த குழுக்கள் கண்துடைப்புக்காகவே அமைக்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழகத்தில், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, பட்டியல் மற்றும் பழங்குடி சமூக மக்களுக்கெதிரான வன்முறை, 2021 ஆம் ஆண்டிலிருந்து, 2023 ஆம் ஆண்டு வரை, மூன்று ஆண்டுகளில், 68% அதிகரித்திருப்பதாக, சமீபத்தில் வெளியான புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்தது. இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது எந்தக் கடுமையான நடவடிக்கையும்  எடுக்காமல், பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடும் வழங்காமல் அலைக்கழித்து வருகிறது திமுக அரசு. 
 
இந்த நிலையில், ஜாதி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை, நான்கு ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, தற்போது, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திருப்பதாக, சட்டசபையில் தெரிவித்திருக்கிறார் முதலமைச்சர் திரு 
ஸ்டாலின்  அவர்கள். 
 
ஏற்கனவே, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த, முதலமைச்சர் தலைமையில் ஒரு குழு அறிவித்தார்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூட வேண்டிய இந்தக் குழு, கடந்த நான்கு ஆண்டுகளில், வெறும் மூன்று முறையே கூடியிருக்கிறது. இந்தக் குழுவின் தலைவரான முதலமைச்சர் இது குறித்து ஏன் பேச மறுக்கிறார்?
 
இது தவிர, மாவட்ட ஆட்சியாளர் தலைமையிலான குழு, காவல்துறை ADGP தலைமையிலான சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குழு என, அனைத்துமே செயலற்று இருக்கையில், மீண்டும் ஒரு ஆணையம் அமைத்திருப்பது யாரை ஏமாற்ற?
 
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது திமுக அரசின் நோக்கமாக தெரியவில்லை. கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் திரு ஸ்டாலின்.  
 
ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் திமுக அமைத்த எண்ணற்ற குழுக்களால், இதுவரை தமிழக மக்களுக்குக் கிடைத்த நன்மை என்ன?
 
இவ்வாறு அண்ணாமலை அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்ந்து எடுக்கப்படுகிறதா?