பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா ஊடகங்கள் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
தமிழக பாஜகவில் மூத்த தலைவராக உள்ள எச்.ராஜா அவ்வபோது தகாத வார்த்தைகளில் பேசுவது அடிக்கடி ட்ரெண்டாகி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் ஊடகங்களை மிகவும் தவறான வார்த்தைகளில் அவர் விமர்சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பத்திரிக்கையாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு. நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றை கண்டித்து சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும் வழங்கி, மக்களின் மனக் கண்ணாடியாக ஊடகமும் பத்திரிக்கைகளும் திகழ்கின்றன என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியில் பத்திரிக்கைகளின் பங்கு இன்றியமையாதது அந்த அக்கறையும் ஆதரவும் பாரதிய ஜனதா கட்சிக்கு தாங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.