Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினமும் ஷூட்டிங் நடத்தும் ஸ்டாலின்.. கருப்புக்கொடி போராட்டம் அறிவித்த அண்ணாமலை!

Advertiesment
Annamalai Stalin

Mahendran

, வெள்ளி, 21 மார்ச் 2025 (14:32 IST)
அதிமுகவை விட திமுகவுக்கு அதிக நெருக்கடிகளை  கொடுத்து வரும் கட்சியாக பாஜக இருக்கிறது. தமிழக அரசியலில் திமுகவுக்கு எதிர்கட்சி நாங்கள்தான். பாஜகவா? திமுகவா? என்கிற நிலையை உருவாக்குவோம் என சில வருடங்களுக்கு முன்பே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்லியிருந்தார். தற்போது அதை செயல்படுத்தவும் துவங்கிவிட்டார்.

மும்மொழிக்கொள்கையை திமுக எதிர்த்தபோது அதை கடுமையாக விமர்சித்தவர் அண்ணாமலைதான். அதோடு, தமிழக அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் டாஸ்மாக் நிர்வாகத்தில் 1000 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் தெரிவித்தது. இது தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு அண்ணாமலை தலைமையில் தமிழகத்தின் பல இடங்களிலும் பாஜக தரப்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில், தமிழக அரசின் நிர்வாக குறைபாடுகளை கண்டித்து நாளை காலை 10 மணிக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடக்கும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தி.மு.க., ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை. பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை.

ஆனால், இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தினந்தோறும் விளம்பர ஷூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தியா கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து, நாளை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார். இதற்கு முன்பாக, நீட் எதிர்ப்பு என்ற பெயரில் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். யாரும் மதிக்கவில்லை. இப்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி கெஞ்சிக் கூத்தாடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடகத்தில் பங்கேற்க தி.மு.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது.

டெல்டாவில் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிப் போயின. ஆனால், கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்து விடச் சொல்ல முதல்வர் ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை. தமிழக விவசாயிகளை விட அவரது இந்தியா கூட்டணிதான் முக்கியமாக இருக்கிறது அவருக்கு. மேகதாது அணை, தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று, பிரதமர் மோடி அரசு தெளிவுபடுத்திய பின்னரும், மேகதாது அணையைக் கட்ட தமிழகத்தின் சம்மதம் தேவையில்லை, அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதல்வர் சிவக்குமாருக்கு தான் வாழிய பாடி வரவேற்கிறது தி.மு.க.,

முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. இது தவிர தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 5 முறை கேரள மாநிலத்திற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் சாதித்தது என்ன?

அரிசி, பருப்பு, காய்கறிகள் என தமிழகத்தில் இருந்து அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்குத் தருவது, மருத்துவக் கழிவுகளும், இறைச்சிக் கழிவுகளும்தான். தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலினை கண்டித்து, நாளை த.மி.ழ.க., பா.ஜ., சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

பா.ஜ.க,வினர் அனைவரும், நாளை (மார்ச் 22) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று. தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதல்வர் ஸ்டாலினைக் கண்டித்து, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்’’ என அண்ணாமலை அதில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 மாவட்டங்களில் இன்று, 10 மாவட்டங்களில் நாளை! - குளிர்விக்க வரும் மழை!