தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது என்பதும் இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதும் தெரிந்ததே. கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர ஒருசில கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஒட்டி, வரும் 23-ம் தேதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி வரை கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை காரணம் காட்டி விடுமுறை அளிக்கப்பட்டாலும், போராட்டமே இந்த நீண்ட விடுமுறைக்கு காரணம் என கூறப்படுகிறது
இந்த நிலையில் நாளை முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் விடுமுறை விடப்பட்டதையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருந்த இளநிலை, முதுகலை தேர்வுகள் அனைத்தும் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையை அடுத்து தற்போது நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. டிசம்பர் 27ஆம் தேதி நடைபெறவிருந்த தேர்வு ஜனவரி 3ஆம் தேதியும், டிசம்பர் 30ல் நடைபெறவிருந்த தேர்வு ஜனவரி 4ஆம் தேதி நடைபெறும் என நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ் பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.