தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழ்நாட்டில் விளையாட்டை வளர்த்தெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், பள்ளிகளில் அதற்கான முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படாதது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகளில் விளையாட்டுப் பாடவேளைகள் இல்லை; விளையாட்டை கற்றுத் தருவதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. நடுநிலைப் பள்ளிகளில் 7 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தாலும், அவற்றில் 80 பணியிடங்கள் மட்டும் தான் நிரப்பப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 99% பணியிடங்கள் காலியாகவே உள்ளன. உயர்நிலைப்பள்ளிகளில் 6000 உடற்கல்வி ஆசிரியர் காலியிடங்களில் 2000 இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை.
அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாரத்திற்கு இரு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த பாடவேளைகளில் விளையாட்டு கற்பிக்கப்படுவதில்லை. மாறாக, அந்த பாடவேளைகளில் பிற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான பள்ளிக்கூடங்களில் விளையாட்டுத் திடல்களே இல்லை. சில பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள் இருந்தாலும் வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அரசு பள்ளிகள் இருந்தால், அவற்றில் விளையாட்டுகளை எவ்வாறு வளர்த்தெடுக்க முடியும்?
இவை ஒருபுறமிருக்க தமிழ்நாட்டு கல்விச்சூழலில் இன்னொரு புதிய கலாச்சாரம் தோன்றியிருக்கிறது. விளையாட்டுத்திடல்களும், விளையாட்டுப் பாடமும் இல்லாத பள்ளிக்கூடங்களை தொழில்நுட்பப் பள்ளிகள் என்ற பெயரில் பிற மாநிலங்களைச் சேர்ந்த கல்விக் குழுமங்கள் தொடங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளுக்கு எந்த தடையும் இல்லாமல் தமிழ்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு எதிரான நோக்கம் கொண்ட பள்ளிகளை அனுமதிக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் குறைந்தது 7 விளையாட்டுக்கான கட்டமைப்புகளுடன் விளையாட்டுத் திடல்கள் ஏற்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஆண்டுதோறும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.