16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியாவின் ஆன்மா அமைதியடைய தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளை மூடுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி விஷ்ணுப்பிரியா, கூலித்தொழிலாளியான தமது தந்தையின் குடிப்பழக்கத்தால் தமது குடும்பத்தின் நிம்மதி குலைந்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தமது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்துள்ள அச்சிறுமி, என் ஆசை என் அப்பா குடிப்பதை நிறுத்த வேண்டும் என்பது தான். எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதை எப்போது காண்பேனோ, அப்போது தான் எனது ஆன்மா அமைதியடையும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். விஷ்ணுப்பிரியாவின் கடிதம் எனது இதயத்தை வாட்டுகிறது.
விஷ்ணுப்பிரியாவின் வேண்டுதல் அவருடையது மட்டுமல்ல.... தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பதின்வயது குழந்தைகளின் மனநிலை இது தான். தமிழ்நாட்டிலுள்ள 90 விழுக்காடு குடும்பங்கள் ஏதோ ஒரு வகையில் மதுவால் பாதிக்கப்பட்டுள்ளன. மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் அமைதி இல்லை. வறுமை... சண்டை.... பசி.... பட்டினி... நோய், மன அழுத்தம், நிம்மதியின்மை ஆகியவை தான் அந்தக் குடும்பங்களை வாட்டுகின்றன. அதன் விளைவு தான் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்ற மாணவர், தந்தையின் குடிப்பழக்கத்தை திருத்த முடியாமல், "அப்பா.. நான் இறந்த பிறகாவது நீ குடிக்காமல் இரு. நான் இறந்த பிறகு எந்தக் காரியமும் செய்யக் கூடாது. இதன் பிறகாவது குடிக்காமல் இருந்தால்தான் எனது ஆன்மா சாந்தியடையும். நான் இறந்த பிறகாவது நாட்டின் பிரதமர், முதலமைச்சர் ஆகியோர் மதுபானக்கடைகளை அடைக்கிறார்களா என்று பார்ப்போம் இல்லாவிட்டால் ஆவியாக வந்து மதுபானக் கடைகளை ஒழிப்பேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு நெல்லை வண்ணாரப்பேட்டை பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தினேஷின் தற்கொலையால் எந்த பயனும் ஏற்படவில்லை. விஷ்ணுப்பிரியாவின் தற்கொலையாவது மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சியில் தமிழில் பேசும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மாணவி, சமூகநீதி பற்றி பேசியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சமூகநீதியைக் காக்க அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அதே உணர்வுடன் விஷ்ணுப்பிரியாவின் கடிதத்தையும் புரிந்து கொண்டு, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் விருப்பமும் மதுவிலக்கு தான். அதை நிறைவேற்ற உதவும் வகையில் தமிழ்நாட்டில் அனைத்து மதுக்கடைகளையும் மூடுங்கள்.... மதுவுக்கு அடிமையானவர்களின் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்துங்கள்.... வேலூர் சிறுமி விஷ்ணுப்பிரியாவின் ஆன்மா அமைதியடைய உதவுங்கள் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.