Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது அரசின் இயலாமையே: அன்புமணி கண்டனம்..!

Advertiesment
Anbumani

Mahendran

, சனி, 29 ஜூன் 2024 (17:36 IST)
வார்த்தை அலங்காரங்கள்  தேவையில்லை:  மதுவிலக்கை நடைமுறைப்படுத்த முடியாதது. அரசின் இயலாமையே என பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
’’தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை  கொண்டு வருவதற்கான சூழல் இல்லை.  தமிழகத்தில்  மதுவிலக்கை நடைமுறைப்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று  மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி அவர்களும்,   “உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்’’ என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களும் கூறியிருக்கின்றனர்.  அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே  அமைச்சரின்  கருத்துகள் காட்டுகின்றன.
 
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போது  குறுக்கிட்டு பேசிய அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் இல்லை என்று கூறியிருக்கிறார். அதன் பொருள் என்னவென்று தெரியவில்லை.  மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள்  அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதுமானது. அந்த எண்ணம் இருந்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கை அறிவித்து,  நாளை முதல் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த  முடியும்.  ஆனால்,  மது ஆலை அதிபர்களின் ஆதரவைப் பெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை என்று தோன்றுகிறது.
 
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் அண்டை மாநிலங்களில் இருந்து  மது உள்ளே வந்து விடும்;  கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்ற  புளித்துப் போன காரணங்களைக்  கூறியே மதுவிலக்கை  தள்ளிப்போடக் கூடாது. தமிழ்நாட்டில் சுமார்  ஐந்தாயிரம் மதுக்கடைகள் இருக்கும்போதே  மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. இது அரசின் தோல்வியே தவிர, இதற்கு வேறு காரணங்கள் இல்லை. 
 
அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் இருந்தாலும் அங்கிருந்து தமிழ்நாட்டிற்குள் மது வராமல் தடுக்க வேண்டியதும்,  கள்ளச்சாராய வணிகத்தை தடுக்க வேண்டியதும் அரசின் அடிப்படைக் கடமைகள். அதற்காகத் தான் காவல்துறை என்ற அமைப்பும், அதில் மதுவிலக்குப் பிரிவு என்ற துணை அமைப்பும் உள்ளன. தமிழகத்தின் எந்த மூலை முடுக்கில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டாலும் அது குறித்து அடுத்த 5 நிமிடங்களுக்குள் அரசுக்கு தகவல் கிடைக்கும் வகையில்  காவலர்கள், கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் என  வலிமையான கட்டமைப்பு அரசிடம் உள்ளது. இவ்வளவையும் வைத்துக் கொண்டு அண்டை மாநிலங்களில் இருந்து மது வருவதையும், கள்ளச்சாராயத்தையும் தடுக்க முடியாவிட்டால் அது அரசின் இயலாமை தான். மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.
 
அரசு அதன் வருவாய்க்காகவும்,  ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும்  மது ஆலைகள் செழிக்க வேண்டும் என்பதற்காகவும் மதுக்கடைகளை தெருவுக்குத் தெரு திறந்து விட்டு,  உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை  என்று  உழைக்கும் மக்களின் மீது பழியை சுமத்துவது  கண்டிக்கத்தக்கது. அதிலும் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்களே சற்றும் சமூகப் பொறுப்பு இல்லாமல் இப்படி பேசுவது நியாயமல்ல. மதுவால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரு லட்சம் பேர் உயிரிழப்பதை விட சிறிது நேரம் அசதியாக இருப்பது எவ்வளவோ மேல். எனவே, தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை..! போக்சோவில் ஆசிரியர் கைது..!!