Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேராசிரியர் பணிக்கான விண்ணப்பக்கட்டணம் ரூ.1000 உயர்வு: அன்புமணி கண்டனம்

Anbumani

Siva

, திங்கள், 25 மார்ச் 2024 (13:42 IST)
பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ.2,500 ஆக உயர்ந்துள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் உடனே அவர் கூடுதலான கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில்  கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான  “தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு” எழுதுவதற்கான  விண்ணப்பக்கட்டணத்தை  66% உயர்த்தி  அத்தேர்வை நடத்தும் மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழகம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவினருக்கான  கட்டணம்  ரூ.1500லிருந்து ரூ.2500 ஆகவும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான கட்டணம் ரூ.1250-லிருந்து ரூ.2,000 ஆகவும், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான கட்டணம் ரூ.500லிருந்து ரூ.800 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.  இந்தக் கட்டண உயர்வை  ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டிக்கத்தக்கது.

இந்தியா முழுவதும்  கல்லூரி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான  ’’தேசியத் தகுதித் தேர்வு” பல்கலைக்கழக மானியக் குழுவால் நடத்தப்படுகிறது. அத்தேர்வில் பங்கேற்பதற்கான அதிகபட்சக் கட்டணமே ரூ.1150 மட்டும் தான். அதைவிட இரு மடங்குக்கும்  கூடுதலான கட்டணத்தை  தமிழக அரசு வசூலிக்கிறது.  தேசியத் தகுதித் தேர்வுக்கு  பட்டியலினத்தவர்/பழங்குடியினரிடம்  ரூ.325  வசூலிக்கப்படும் நிலையில்,  தமிழக அரசு அதை விட இரண்டரை மடங்குக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  இது பகல் கொள்ளையாகும்.

தகுதித் தேர்வு எழுதும் மாணவர்களில் பெரும்பான்மையினர் வேலையில்லாதவர்கள்.  அவர்களுக்கு வருவாய் ஆதாரம் எதுவும் கிடையாது. இந்தக் கட்டணத்தைச் செலுத்த  அவர்களின் பெற்றோரைத் தான் எதிர்பார்த்திருப்பார்கள்.  அவர்களின் குடும்பமும் வறுமையில் வாடும் குடும்பமாக இருந்தால், இந்தத் தேர்வையே எழுத முடியாத நிலை உருவாகி விடும். மாணவர்கள் அவர்களின் கனவைத் தடுக்கும்  வகையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்படுவதும்,அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பதும் மன்னிக்க முடியாதவை.

தமிழ்நாட்டில் மாநிலத் தகுதித் தேர்வை ஒன்றரை லட்சம் பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இவர்களிடமிருந்து கட்டணமாக குறைந்தது ரூ.30 கோடி வசூலிக்கப்படும். ஆனால், தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வை நடத்த  இவ்வளவு செலவு ஆகாது. கட்டணக் கொள்ளை நடத்தி மாணவர்களை சுரண்டும் செயலை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், தமிழக அரசு அரசும் கைவிட வேண்டும். கட்டண உயர்வை  திரும்பப் பெற  வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலில் வந்தது யார்..? சேகர்பாபு ஜெயக்குமார் இடையே வாக்குவாதம்..!