நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் தற்கொலை செய்து கொண்டு மரணம் அடைந்த ஏழை மாணவி அனிதாவின் பெயரில் அரியலூரில் அரசு மருத்துவமனையை தமிழக அரசு அமைக்க வேண்டும் என நடிகர் ஆனந்த ராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.
அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழகத்தின் பல இடங்களிலும் கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் தெருவில் இறங்கி போராட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர் சந்திப்பில் பேசிய நடிகர் ஆனந்தராஜ் “ நீட் தேர்வு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய சமரசங்களை ஏற்க முடியாது. நீட் தேர்வை தடுக்க தமிழக அரசும் தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அதன் விளைவாகவே அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு அரசு ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தால், அனிதா வசித்து வந்த அரியலூர் குழுமூரில் அனிதாவின் பெயரில் ஒரு மருத்துவமனையை தமிழக அரசு அமைக்க வேண்டும். அது முடியாது எனில், அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கான ஆதரவையும், அனுமதியையும் அரசு அளிக்க வேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.