கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் பாட்டிக்கு மஹிந்திரா குழும நிறுவனர் வீடு கட்டிக் கொடுத்துள்ள சம்பவம் பெரும் வைரலாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள வடிவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி. 85 வயதாகும் கமலாத்தாள் பாட்டி அப்பகுதியில் நீண்ட காலமாக ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வருகிறார்.
கடந்த ஆண்டு இவர் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மஹிந்திரா நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா அந்த பாட்டியின் வீடியோவை பகிர்ந்து அவர் எங்கிருக்கிறார் என்று தகவல் கேட்டிருந்தார்.
அதை தொடர்ந்து கமலாத்தாள் பாட்டிக்கு சமையல் எரிவாயு அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்டவற்றை ஆனந்த மகிந்திரா வாங்கி கொடுத்தார். இந்நிலையில் தற்போது ஆனந்த மஹிந்திரா கமலாத்தாள் பாட்டிக்கு வீடே கட்டிக் கொடுத்துள்ளார்.
இதற்காக முன்பே முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1.75 செண்ட் இடமும், மஹிந்திரா நிறுவனம் 1.25 செண்ட் நிலமும் வாங்கி பாட்டி பெயரில் பதிவு செய்து கொடுத்தனர். அந்த இடத்தில் தற்போது 7 லட்ச ரூபாய் மதிப்பில் ஆனந்த் மஹிந்திரா வீடு ஒன்றை கட்டி அன்னையர் தினமான நேற்று பாட்டிக்கு அதை பரிசாக அளித்துள்ளார்.