சின்னத்திற்காக தேர்தல் ஆணையம், சுப்ரீம் கோர்ட் என பெரும் சட்டப் போராட்டங்களுக்கு பின்னர் மக்களவை தேர்தலில் களமிறங்கியுள்ள அமமுகவுக்கு, அதிமுக, திமுக தான் பிரதான எதிரியாக இருக்கும் என்று பார்த்தால் சுயேட்சைகள் பலர் அமமுக வேட்பாளர்களுக்கு சவாலாக உள்ளனர்.
பல சுயேட்சை வேட்பாளர்கள் அமமுகவால் புகழ்பெற்ற குக்கர் சின்னத்தை பெற்று, வாக்காளர்களை குழப்பி வருகின்றனர். அதேபோல் அமமுக வேட்பாளர்களின் பெயர்களிலேயே சுயேட்சைகளும் போட்டியிடுவதால் அமமுக திணறி வருவதாக கூறப்படுகிறது
உதாரணத்திற்கு பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதியின் அமமுக வேட்பாளர் டி.கே.ராஜேந்திரன். இந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் பெயரும் ராஜேந்திரன் தான். அதுமட்டுமின்றி இவருக்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது
அதேபோல் அரூர் தொகுதி அமமுக வேட்பாளர் பெயர் முருகன். இதே தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை ஒருவரின் பெயரும் முருகன் தான். மேலும் திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் காமராஜ் பெயரில் இன்னொரு காமராஜரும், சாத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுப்பிரமணியம் பெயரில் இன்னொரு சுப்பிரமணியமும் போட்டியிடுவதால் வாக்காளர்கள் பெரும் குழப்பம் அடைய வாய்ப்பு உள்ளது என்பதும், இந்த சுயேட்சைகளுக்கு அமமுகவின் வாக்குகள் செல்ல வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது