அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்க்கு விதிக்கப்பட்ட தடை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளது வைரலாகியுள்ளது.
மதுரையில் கடந்த ஆண்டில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில் செல்லூர் ராஜூ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி தனது விளக்கங்களை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை ஆர்ப்பாட்டத்தில் உண்மையைதான் பேசினேன். இல்லாத எதையும் திரித்து பேசவில்லை என்றும், அவதூறு வழக்கெல்லாம் தனக்கு பெரிய விஷயம் இல்லை என்றும், வழக்குகள் எல்லாம் தனக்கு ஜுஜுபி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அரசியலில் இருப்பதால் வரும் மாலை, மரியாதைகளையும் சரி, ஜெயில், வழக்குகளையும் சரி. அனைத்தையும் தான் சந்திக்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அதிமுக இலச்சினை, கொடி பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் “நாங்கள் புலிவேட்டைக்கு சென்றுக் கொண்டிருக்கிறோம். எலி வேட்டையை பற்றி பேசாதீர்கள்” என்று கிண்டலாக கூறியுள்ளார்.