Publish Date: Mon, 13 Aug 2018 (18:27 IST)
Updated Date: Mon, 13 Aug 2018 (18:28 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின், ஸ்டாலின் தலைவராக்கப்படலாம் எனவும், அழகிரி மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார் எனவும் செய்திகள் பரவி வருகிறது.
நாளை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவசர செயற்குழுவை கூட்டியுள்ள நிலையில், இன்று காலை மெரினா கடற்கரைக்கு குடும்பத்துடன் வந்து கருணாநிதிக்கு சமாதிக்கு மரியாதை செலுத்திய அழகிரி, தனது ஆதங்கத்தை கொட்டவே இங்கு வந்தேன் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும், கட்சியில் உள்ள தனது ஆதங்கம் பற்றி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கூறுகிறேன் எனவும் தெரிவித்தார். ஆனால், அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்க கூடாது என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ அன்பழகன் ஆகியோர் வெளிப்படையாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்த பரபரப்பான சூழ்நிலையில் தனியார் ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு அழகிரி பின்வருமாறு பேட்டி அளித்துள்ளார். அதில், உங்களது அடுத்த திட்டம் என்னவென கேட்கப்பட்டதற்கு, கண்டிப்பாக என் ஆதரவாளர்களிடம் நான் பேசுவேன். தற்போது ஒன்றும் ஆக்டிவா இருக்கமாட்டோம்.
நேரம் வரும்போது அனைத்திற்கும் காலம் பதில் சொல்லும் என்று சொன்னேன் அல்லவா? கண்டிப்பாக காலம் பதில் சொல்லும். இவர்களை தலைவரே தண்டிப்பார். தலைவரின் ஆத்மா இவர்களை சும்மா விடாது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.