தேனியில் சுவரொட்டி அவமதிக்கப்பட்டதால் அதிமுக முன்னாள் கவுன்சிலர் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் அஜித் ரசிகர்கள் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயமணி வயது 49. இவர் அதிமுக முன்னாள் நகராட்சி கவுன்சிலர். அதே பகுதியில் நடிகர் அஜித்குமார் ரசிகர்கள் அவருடைய புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். சம்பவத்தன்று இந்த சுவரொட்டி மீது யாரோ சாணம் வீசி அவமதித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் சிலர் ஜெயமணி வீட்டுக்கு சென்று சுவரொட்டியை அவமதித்தது யார் என்று கேட்டு அவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த ஜெயமணியின் தாயார் மற்றும் மனைவியிடமும் அவர்கள் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளால் பேசி , கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தேனி போலீஸ் ஸ்டேஷனில் ஜெயமணி புகார் அளித்தார். அதன்பேரில் அஜித்குமார் ரசிகர்களான ரோடு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (27), பாலமுருகன் (23) அஜித்குமார் (20), செல்வகுமார் (26), விஜய் (22), ரகுநாதன்(21), முத்துசரவணன்(22), செந்தில்குமார் (20), ஆகிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் விக்னேஷ் தவிர மற்ற ஒன்பது பேரையும் போலீசார் கைது செய்தனர் விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.