புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டதாகவும், இண்டிகோ நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல், மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே இன்று மதியம் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் புயல் எச்சரிக்கை காரணமாக, சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி செல்லும் 18 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று சென்னையில் இருந்து எந்த விமானங்களும் இயக்கப்படாது என்றும், அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும், இண்டிகோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், சென்னையில் இருந்து கொல்கத்தா, ஹைதராபாத், புவனேஸ்வர், புனே நகரங்களுக்கு செல்ல வேண்டிய ஒன்பது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இண்டிகோ நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 5 மணி வரை எந்த விமானங்களும் இயக்கப்படாது என்றும், தற்காலிகமாக விமான நிலையம் மூடப்படுவதாகவும், விமான நிலையம் திறக்கப்படும் நேரம் குறித்து விரைவில் அறிவிப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.