திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவும் தமிழக வெற்றிக் கழகமும் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அதிமுக மற்றும் த.வெ.க. கூட்டணி தொடர்பான பேச்சுகள் அதிமுகவினரால் வேண்டுமென்றே பரப்பப்படும் ஒரு பொய்யான செய்தி என்று திருமாவளவன் திட்டவட்டமாகக் கூறினார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், தனது கொள்கை எதிரியாக பாஜகவை குறிப்பிடும் விஜய், அந்த கூட்டணியில் சேருவாரா என்பது தெரியவில்லை. அப்படி ஒரு கூட்டணி உருவானால், விஜய்யின் நிபந்தனைக்காக பாஜகவை அதிமுக கழற்றிவிட்டால், அதிமுகவின் அரசியல் நம்பகத்தன்மை கடுமையான கேள்விக்குள்ளாகும் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.
த.வெ.க. தலைவர் விஜய், கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கப் பாதுகாப்பு கோரியது குறித்த கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், "விஜய் மக்கள் செல்வாக்கு மிக்கவர் என்பதால், அவர் செல்லும் இடங்களில் பாதுகாப்பு தேவையானதுதான். அவர் கோரிக்கை வைத்ததில் எந்த தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.