சொத்து வரி உயர்வு தொடர்பான முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு.
தமிழகம் முழுவதும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வு, சுங்க வரி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நிலையில் சொத்துவரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொத்துவரியை குறைக்கக்கோரி அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரின் துறை வாரியான மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சொத்துவரி உயர்வு குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகள் வருவாய் பற்றாக்குறையில் இருக்கும் நிலையில் அதை சமாளிக்க வரி உயர்வு தேவை. சொத்து வரி உயர்வை மனமுவந்து செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சொத்து வரி உயர்வு தொடர்பான முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு செய்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி பின்வருமாறு பேசினார்...
கொரோனா பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. மக்கள் மீது பெரும் சுமையை அரசு சுமத்தியுள்ளது. உடனடியாக சொத்துவரி உயர்வை திரும்பப்பெற வேண்டும். சொத்துவரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை என பேட்டியளித்தார்.