தமிழக தேர்தல் அதிகாரி அனுப்பும் கடிதங்களை அதிமுக திரும்ப அனுப்பி வருவதால் இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து முரண்பாடு நிலவிய நிலையில் கடந்த ஆண்டில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டதோடு, எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால் அதிமுகவின் இந்த தீர்மானம் தேர்தல் ஆணையத்தால் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதனால் அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் அனுப்பும் கடிதங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என பெயர்கள் குறிப்பிட்டே வருகின்றன. இதனால் அந்த கடிதங்களை அதிமுக திருப்பி அனுப்பி வருகிறது.
2 முறை கடிதம் அனுப்பியும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அதை மீண்டும் மீண்டும் திருப்பி அனுப்பியதால் இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.