தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் அவரின் நெருங்கிய தோழி சசிகலாவை அமர வைக்க பெரும்பாலான அதிமுகவின் குரல் கொடுத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் சசிகலாவை போயஸ் கார்டனில் சந்தித்து உரையாடி வருகின்றனர்.
விரைவில் நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் நேற்று கூறினார்.
இருந்தாலும், சசிகலாவே அந்த பதவியில் அமர்ந்து, கட்சியை வழி நடத்த வேண்டும் என தம்பித்துரை, நவதீதகிருஷ்ணன், நடிகர் கருணாஸ், சி.சரஸ்வதி, வளர்மதி உள்ளிட்ட பல அதிமுகவினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா அமர அதிமுகவின் 31 அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனனும் சசிகலாதான் அந்த பதவியில் அமர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சசிகலாவுக்கு ஆதரவாக அம்மா பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.