அதிமுக நடத்திய கூட்டத்தில் 5 அமைச்சர்கள் பங்கேற்காத விவகாரம் அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விட 40,707 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இது, எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ் தரப்பினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதேபோல், இந்த தோல்வியை அடுத்து, நிர்வாகிகளின் ஆதரவும், மக்களின் ஆதரவும் தங்கள் பக்கம் இருப்பதாக தினகரன் தரப்பு கூறி வருகிறது. மேலும், எடப்பாடி பக்கம் உள்ள சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் தாவி விடுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், 24ம் தேதி தேர்தல் முடிவு வெளியாகி தினகரனே வெற்றி பெறுவார் என்பது உறுதியான பின்பு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சில அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேச முயற்சித்தாராம். அதில் சிலர் போனை எடுக்கவில்லை. சிலரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம். இதனால் டென்ஷனான எடப்பாடி, உளவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இதுபற்றி விசாரிக்க சொன்னாராம்.
அதில், 4 அமைச்சர்கள் தங்களது உதவியாளர்களிடம் பூச்செண்டு கொடுத்து அனுப்பி, தினகரனுக்கு வாழ்த்து கூறியது தெரிய வந்ததாம். இதுகேட்டு அதிர்ச்சியான எடப்பாடி, உடனடியாக ஓ.பி.எஸ்-ஐ தொடர்பு கொண்டு இதுபற்றி விவாதித்துள்ளார். இப்படியே விட்டால் சரி வராது. தினகரன் பக்கம் உள்ள நிர்வாகிகளை உடனடியாக நீக்குவோம். அப்போதுதான் நம் மீது பயம் வரும் முடிவு செய்யப்பட்டதாம். அதன் விளைவாகவே, நேற்று கூடிய கூட்டத்தில் தினகரனின் ஆதரவாளர்களான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல், கலைராஜன், ரங்கசாமி உள்ளிட்ட சிலரின் பதவிகள் பறிக்கப்பட்டது என கூறப்படுகிறது.
இந்நிலையில், எடப்பாடி தரப்பு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ராஜூ, வீரமணி, ராஜேந்திர பாலாஜி, பாஸ்கரன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், அவர்கள் தினகரன் பக்கம் சென்று விடுவார்கள் என்ற தகவல் பரவியது.
அரசு விழா, சொந்த ஊரில் உள்ளது என்பது போன்ற சில காரணங்களால் வரமுடியவில்லை என அமைச்சர்கள் தரப்பில் கூறப்பட்டாலும், சில எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் தினகரன் பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதால் எடப்பாடி அரசு பீதியில் ஆழ்ந்திருப்பதாக கூறப்படுகிறது.