அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமெரிக்காவிற்கு செல்ல ரோடு இருந்தால் அங்கு சென்று கூட தமிழக அரசின் சாதனைகள் எடுத்துச்சொல்வேன் என கூறியுள்ளது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
ஆளும் கட்சியான அதிமுகவின் சாதைகளை எடுத்துச்சொல்லும் விதமாக திருவண்ணாமலையில் 3 வது நாளாக சைக்கிள் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராம்சந்திரன், சில அதிகாரிகள், அதிமுக பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து மகளிருக்கு இலவச இரு சக்கர வாகனங்கள், பிரதம மந்திரி திட்டத்தில் இலவச வீடு கட்ட ஆணை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர், 10,000 கிமீ-ல் தமிழ்நாட்டில் இருந்து அமெரிக்கா செல்லலாம். ஆனால், அமெரிக்காவிற்கு செல்ல ரோடு இல்லை, ரோடு இருந்தா அமெரிக்காவிற்கு சைக்கிளில் பயணம் செய்வேன்.
அம்மாவின் சாதனைகளை அமெரிக்கா சென்று சொல்வதற்கு முதல்வர் உத்தரவிட்டால், கப்பலில் கைக்கிளை ஏற்றி, திருவண்ணாமலையில் இருந்து அமெரிக்கா சென்று தமிழக அரசின் சாதனைகளை எடுத்துரைப்போம் என கூறினார்.
அம்மா மறைவிற்கு பின்னர் அதிமுக கட்சி அமைச்சர்களின் பேச்சுக்கள் பல கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. தற்போது இவரது இந்த பேச்சையும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்.