எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் எந்த ஒரு பெரிய கட்சியும் கூட்டணி பேச்சு வார்த்தைக்கு வராததை அடுத்து இரண்டாம் கட்ட தலைவர்கள் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு பெரிய மெகா கூட்டணியுடன் போட்டியிட்ட நிலையில் தற்போது ஒரு பெரிய கட்சி கூட இல்லாமல் போட்டியிடுவது தற்கொலைக்கு சமம் என்று அவர்கள் கூறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னால் பூத் கமிட்டி உள்பட மற்ற பணிகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள், கூட்டணி அமைப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று பெருமையாக சொன்ன எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் ஒரு கட்சியை கூட கூட்டணிக்குள் கொண்டுவர முடியவில்லை என்றும் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் அந்த கட்சியும் கூட்டணிக்கு வர தயாராக இல்லை என்ற நிலை தான் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் முழுக்க முழுக்க காரணம் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் அவர் கட்சியின் ஒற்றை தலைமையில் மட்டுமே கவனம் செலுத்தினார் என்றும் மற்ற கட்சிகளுடன் இணக்கமாக இருப்பதில் கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் எஸ்டிபிஐ மற்றும் புரட்சி பாரதம் ஆகிய இரண்டு சிறிய கட்சிகளை தவிர வேறு முகம் தெரிந்த கட்சிகள் எதுவும் அதிமுக கூட்டணியில் இல்லை என்றும் சாதுரியமாக காய் நகர்த்த வேண்டியவர் கூட்டணி விவகாரத்தில் மொத்தமாகவே கோட்டை விட்டுவிட்டார் என்றும் விரக்தியுடன் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறி வருகின்றனர்.