சசிகலா தரப்பிற்கு என்ன தேவையோ அதை கொடுத்து அனுப்பி விடுங்கள். கூடவே வைத்திருக்காதீர்கள் என்று நான் ஜெயலலிதாவிடம் சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை என அதிமுக முன்னாள் சட்ட ஆலோசகர் ஜோதி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முன்னாள் சட்ட ஆலோசகராக பணியாற்றியவர் ஜோதி. இவர் 2008-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகியவர் தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறுகையில்,
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்வு செய்தது செல்லாது. கட்சியில் சசிகலா மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டாலும் அவர் அதற்கு முன்பு உறுப்பினராக இருந்த நாட்களின் எண்ணிக்கை ஒழுங்கு நடவடிக்கையின் போது காலாவதியாகி விடும். அதன் பிறகு அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள் கழித்துதான் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். எனவே அவரது தற்போதைய பதவி செல்லாது.
அதேபோன்று சசிகலா டி.டி.வி.தினகரனை துணை பொதுச் செயலாளராக அறிவித்தார். அதுவும் செல்லாது. காரணம் டி.டி.வி.தினகரன் அதிமுக கட்சி உறுப்பினரானதையெ இன்னும் அங்கிகரிக்கபடவில்லை. பிறகு எப்படி அவர் துணை பொதுச் செயலாளராக பதவி ஏற்க முடியும்?.
அ.தி.மு.க.வில் ஜெயலலிதா எனக்கு முக்கியத்துவம் அளித்தது சசிகலா தரப்பு விரும்பவில்லை. அவர்களுக்கு என்ன தேவையோ அதை கொடுத்து அனுப்பி விடுங்கள். கூடவே வைத்திருக்காதீர்கள் என்று நான் ஜெயலலிதாவிடம் சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அதன் மூலம் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள அவர் தவறி விட்டார் என்று கூறினார்.