எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மன்னார்குடியில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து டிடிவி தினகரன் அணியின் கொடியை ஏற்றி வைத்தார் திவாகரனின் மகன் ஜெயானந்த். அந்த கொடியை அதிமுகவினர் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சசிகலாவின் சகோதரர் திவாகரன் தலைமையில் நேற்று மன்னார்குடியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திவாகரனின் மகன் ஜெயானந்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இதற்காக தேரடியில் உள்ள எம்ஜிஆர் சிலை புதுப்பிக்கப்பட்டது.
அந்த சிலைக்கு திவாகரனின் மகன் ஜெயானந்த் மாலை அணிவித்து, அந்த இடத்தில் பறந்துகொண்டிருந்த அதிமுக கொடியை இறக்கிவிட்டு டிடிவி தினகரன் அணி பயன்படுத்தும் அண்ண படம் போடாத கொடியை ஏற்றினார்.
எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய அதிமுகவின் ஒரிஜினல் கொடியை இறக்கிவிட்டு, தினகரன் அணி பயன்படுத்தும் கொடியை ஏற்றியது அதிமுகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் ஜெயானந்த் ஏற்றிய அந்த கொடியை இறக்கி கிழித்துவிட்டு, அதிமுகவின் உண்மையான கொடியை ஏற்றினர் அதிமுகவினர். இந்த சம்பவம் திவாகரன் தரப்பிற்கு கோபமடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.