அதிமுக கட்சியின் முக்கிய பதவியான ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
சமீபத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதாக அதிமுக அறிவித்துள்ளது.
டிசம்பர் 4ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த வேட்புமனுக்கள் டிசம்பர் 5ல் சரிபார்க்கப்படும். வேட்புமனுவை திரும்ப பெற டிசம்பர் 6ம் தேதி மாலை 4 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 7ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ள நிலையில் இந்த தேர்தல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.