ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம்: தமிழக அரசு திட்டவட்டம் - உச்ச நீதிமன்றத்தில் பதில்!

Mahendran
வியாழன், 19 ஜூன் 2025 (12:07 IST)
சிறுவன் கடத்தல் வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறப் போவதில்லை என்று தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
 
சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு துறைரீதியாக நடவடிக்கை மேற்கொண்டது.
 
இந்த நிலையில், சிறுவன் கடத்தல் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, ஏடிஜிபி ஜெயராம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஏன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது?' என்று தமிழக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பியது. மேலும், சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்கு ஜெயராம் ஒத்துழைப்பதால், பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர்.
 
ஆனால், ஜெயராமை பணியிடை நீக்கம் செய்ததற்கான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசு, விசாரணை முடியும் வரை பணியிடை நீக்க உத்தரவை திரும்பப் பெற முடியாது என திட்டவட்டமாகத் தெரிவித்தது. மேலும், விசாரணை முடிந்தவுடன், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் விளக்கமளித்தது.
 
இதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போன்ற வேறு துறைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது. மேலும், இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தின் வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றவுள்ளதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை ஒத்திவைத்தது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக நாடுகளை உலுக்கிய இருமல் மருந்து விவகாரம்! விளக்கம் கேட்ட உலக சுகாதார அமைப்பு!

இபிஎஸ் கூட்டத்தில் தவெக கொடியை ஆட்டியது அதிமுகவினரா? - டீகோட் செய்த நெட்டிசன்கள்!

ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த ஆசிரியை; பரிசோதகரை மிரட்டி வாக்குவாதம்..!

உயரதிகாரிகளின் டார்ச்சரால் மன உளைச்சல்: மனைவிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை..!

'கை’ நம்மை விட்டு போகாது.. பாஜக புது அடிமையை தேடும்.. காங்கிரஸ், தவெக குறித்து உதயநிதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments