Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர்  கிருஷ்ணசாமி

Mahendran

, சனி, 23 நவம்பர் 2024 (15:33 IST)
உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம் மீது தயவு தாட்சனையின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
உலக அளவில் இந்தியாவின் நன்மதிப்பைக் கெடுக்கும் அதானி குடும்பம்! தயவு தாட்சனையின்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.!
அதானிக் குடும்பத்தின் மீதான 2200 கோடி ஊழல் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் இந்தியாவின் நன்மதிப்பிற்கு பெரும் பங்கம் விளைவித்துள்ளது. அதானி குறித்து குற்றச்சாட்டை ஹிண்டன் பர்க் கடந்த வருடம் கூறிய பொழுது அது CIA சதி என்று கடந்து போய் விட்டோம். ஆனால், இந்த முறை அமெரிக்க அரசு அதானியின் முறைகேட்டைச் சுட்டிக்காட்டியது மட்டுமின்றி, பல ஆதாரங்களுடன் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
அதானி குடும்பத்தின் சூரிய ஒளி மின் நிறுவனத்திலிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து, அதன் பின்னரே அம்மாநிலங்களின் தேவையைக் கணக்கில் கொண்டு விற்பனை செய்யப்படுகிறது. அதானி கம்பெனியின் சோலார் மின்சாரத்தின் விலை அதிகமாக இருந்ததால் பல மாநில அரசுகள் வாங்க மறுத்துவிட்டன. எனவே பின்னர் மத்திய, மாநில அரசு அதிகாரிகளை ஊழல் படுத்தி அதிக விலைக்கு அதானி குடும்பம் தனது சூரிய ஒளி மின்சாரத்தை வாங்க வைத்துள்ளனர்.
 
மேலும், இதன் மூலம் அதானி கம்பெனியின் வர்த்தகத்தை மிக உ யர்த்திக் காட்டி அமெரிக்காவிலிருந்து முதலீடுகளை ஈர்த்து உள்ளனர். அமெரிக்க நாட்டின் சட்டப்படி, இது மிகப்பெரிய குற்றமாகும். இந்தக் குற்றச்சாட்டுகளில் ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட 4 மாநிலங்களும் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகளுக்கும் சாதாரண மக்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று எவரும் ஒதுங்கிப் போய் விட முடியாது.
 
அண்மைக்காலமாக அடிக்கடி மின் கட்டண உயர்வும், அதனால் தொழில் நிறுவனங்கள் அபரிவிதமான மின்சாரக் கட்டண உயர்வால் பல தொழில்கள் நொடிந்து போய் விட்டன. அதிகாரிகள் ஊழல் எனும் வியாதிக்கு ஆட்பட்டு, அதிக விலைக்கு மின்சாரக் கொள்முதல் செய்வதால் தான் அந்த கூடுதல் விலை சாதாரண மக்களின் தலையில் சுமத்தப்படுகிறது. எனவே அதானி மீதான ஊழல் குற்றச்சாட்டை எளிதில் கடந்து போக முடியாது.
 
இதேபோன்று மத்திய அரசின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரிச் சுரங்கங்ளை குத்தகை எடுப்பதிலும் அரசியல் தலைமைகளையும், அதிகாரிகளையும் ஊழல் படுத்தாமல் கையகப்படுத்தி இருக்க முடியாது.மேலும், மிகக் குறுகிய காலத்தில் அதானி உலக அளவில் தொழில் சாம்ராஜ்யத்தைக் கட்டியிருக்க முடியாது. இப்போது சர்வதேச அளவில் முதல் பணக்காரர் என்ற நிலை மாறி, சர்வதேச அளவில் மிகப் பெரிய ஊழல்வாதி - குற்றவாளி என்ற நிலைக்கு அதானி தள்ளப்பட்டு இருக்கிறார். அதானி குழுமம் மீது மத்திய அரசு முறையான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதானியை பாதுகாக்க மத்திய அரசு எவ்வித முயற்சியும் செய்யக் கூடாது. இது 140 கோடி மக்களின் உலக அளவில் நன்மதிப்பு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல; அவர்களின் நலன் சார்ந்த விஷயமுமாகும்.
 
மேலும், தமிழ்நாட்டில் கடந்த 10 வருடங்களாக அதானிக் குடும்பத்திடமிருந்து கூடுதல் விலைக்கே சூரிய ஒளி மின் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் திருச்சுழி / கமுதி பகுதியில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை தமிழ்நாட்டில் மிக அதிக விலைக்கு பெற்றுள்ளனர். எனவே, தமிழ்நாட்டில் அதானி குழுமத்திடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தையும் வெளிச்சத்திற்கு வர வேண்டும். ஏழை, எளிய மக்களின் மீதான மின்சுமை அதிகரிக்கக் காரணமான அதானி குடும்பத்தின் அனைத்து ஊழல் நடவடிக்கைகளையும் முழுமையாக விசாரிக்க; உயர்மட்ட விசாரணைக்கு அமைக்க வேண்டும்; அமெரிக்க அரசின் அதானி பிடிவாரண்டிற்கு தடை கேட்கக் கூடாது. கார்ப்பரேட் கம்பெனிகள் இந்தியாவின் அடையாளங்கள் அல்ல.! மாறாக அவமானச் சின்னங்களாக மாறி வருவது தடுக்கப்பட வேண்டும்.
 
இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!