உயர்நீதிமன்ற தடையை மீறி ஒட்டகத்தை வெட்டி குர்பானி கொடுத்ததாக நடிகர் வடிவேலுவின் உதவியாளர் உள்ளிட்ட 30 பேர் மீது மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விலங்குகள் நல ஆர்வலரான ராதா ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், ’பக்ரீத் பண்டிகைக்காக தமிழகத்திற்கு ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டு வெட்டப்படுவதாகவும், இது விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின்படியும், மத்திய அரசு சட்டத்தின்படியும் குற்றம் என்பதால், இதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ’ஆடுகளை வெட்டுவது போல ஒட்டகங்களுக்கும் பிரத்யேக அறுவைக் கூடங்கள் இருந்தால் மட்டுமே ஒட்டகம் வெட்டுவதை அனுமதிக்க முடியும் என்றும், தமிழகத்தில் அப்படியொரு ஏற்பாடு இல்லாததால், ஒட்டகங்களை வெட்ட அனுமதிக்க முடியாது’ என்றும் கூறி விட்டனர்.
இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் உதவியாளர் ஆதம் பாவா என்பவர் மதுரை பள்ளிவாசல் ஒட்டகம் ஒன்றை வாங்கி குர்பானி கொடுப்பதற்காக வைத்திருந்தார். இதனை அறிந்த போலீஸார் நீதிமன்ற உத்தரவை கூறி ஒட்டகத்தை வெட்டக்கூடாது என கூறிச் சென்றனர். ஆனால் அதனை ஏற்காத ஆதம் பாவா புதுக்கோட்டை பகுதிக்கு அருகே வைத்து ஒட்டகத்தை வெட்டி குர்பானி கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் தற்போது ஆதம் பாவாவைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆதம் பாவா உள்ளிட்ட 30 பேர் மீது நாகமமலைப் புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அறிந்த ஆதம் பாவா உள்ளிட்ட 30 பேரும் தலைமறைவாகி விட்டனர். தற்போது போலீஸார் அவர்களை தேடி வருகின்றனர்.