காவிரி விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிடாது : நடிகர் விஷால் பேட்டி
காவிரி விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிடாது : நடிகர் விஷால் பேட்டி
தமிழகத்திற்கு காவிரி நீரை, கர்நாடக அரசு திறந்துவிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு பல்வேறு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவ படத்தை எரித்தும் அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். சமீபத்தில் கன்னட சினிமா நடிகர், நடிகைகள் ஒன்றாக கூடி பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பை காட்டினர்.
தற்போது அது தனிமனித தாக்குதல்களாகவும் மாறியுள்ளது. கர்நாடகாவில் தமிழர்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக பல்வேறு அதிர்ச்சியான செய்திகள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், எதற்கெடுத்தாலும் நடிகர்களை குறை கூறும் சிலர், காவிரி விவகாரத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் எதுவும் செய்யவில்லை என்று வழக்கம்போல் தங்கள் ஆதங்கங்களை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த விஷால் “எல்லா அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். எனவே சங்கத்திற்குள் அரசியலை கொண்டு வர விருப்பமில்லை. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மேற்பார்வையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
காவிரி விவகாரம் குறித்து தனிப்பட்ட முறையில் என்னிடம் கருத்து கேட்டால் நான் கூறுவேன். ஆனால் நடிகர் சங்க நிர்வாகி என்ற முறையில் என்னால் எதுவும் கூற முடியாது. காவிரி விவகாரத்தில் நடிகர் சங்கம் தலையிடாது” என்று கூறினார்.