தினகரனின் அமமுகவில் காமெடி நடிகருக்கு அமைப்பு செயலாளர் பதவி!

வியாழன், 12 செப்டம்பர் 2019 (12:03 IST)
தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுகவுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அக்கட்சி படுதோல்வி அடைந்தது. இதனை அடுத்து அந்த கட்சியில் இருந்து இருந்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்து மாற்றுக் கட்சிகளில் இணைந்து வருகின்றனர். சமீபத்தில்கூட தங்கத்தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது இருக்கும் ஒரு சிலரையாவது காப்பாற்றிக் கொள்ள முடிவு எடுத்த டிடிவி தினகரன் புதிய நிர்வாகிகளை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன்படி கழக தேர்தல் பிரிவு செயலாளராக மாணிக்கராஜா என்பவரை அவர் நியமனம் செய்துள்ளார். இவர் கழக தேர்தல் பிரிவு செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள செந்தமிழன் என்பவருடன் இணைந்து செயலாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் கழக அமைப்புச் செயலாளர்களாக ஐந்து பேர்களை புதிதாக தினகரன் நியமனம் செய்துள்ளார். சிவா ராஜமாணிக்கம், டாக்டர் கதிர்காமு, தேவதாஸ், ஹென்றி தாமஸ் மற்றும் நடிகர் செந்தில் ஆகியோர் கழகத்தின் அமைப்பு செயலாளர்களாக இன்றுமுதல் பணியாற்றுவார்கள் என்று தினகரன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் நடிகர் செந்தில் தினகரனின் அமமுகவில் தன்னை இணைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் திமுகவை வெளுத்த சீமான்: அதிமுகவின் பழைய பாசம் காரணமா?