மதுரைக்கு இன்று விஜய் செல்லும் நிலையில் அங்கு ரோடு ஷோ நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய் சமீபத்தில் பூத் கமிட்டி மாநாட்டிற்காக கோவை சென்றபோது ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் அவரை காண வந்ததால் கோவையே பரபரப்பாகியது. சட்டமன்ற தேர்தல் பணிகள் ஒருபக்கம் இருக்க, ஜனநாயகன் ஷூட்டிங்கிலும் நடித்து வருகிறார் விஜய்.
தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் திண்டுக்கலில் நடந்து வரும் நிலையில் அங்கு செல்வதற்காக இன்று மதுரைக்கு விமானம் மூலமாக செல்ல உள்ளார் விஜய். மாலை 4 மணியளவில் அவர் மதுரை விமான நிலையம் செல்ல உள்ள நிலையில், தகவலறிந்து காலையிலேயே மதுரை விமான நிலையத்தில் தவெக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை காவல் ஆணையர் லோகநாதன், தமிழக வெற்றிக்கழகம் மதுரையில் ரோடு ஷோ நடத்த எந்த அனுமதியும் பெறவில்லை என்றும், அனுமதியில்லாமல் ரோடு ஷோ நடத்தினால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
ஆனால் மதுரையில் விஜய் வந்து இறங்கினால் கண்டிப்பாக அவரது வாகனம் வெளியேற பெரும் இடையூறு ஏற்படும் என்பதால் திருச்சி விமான நிலையத்தில் இறங்கி திண்டுக்கல் செல்ல விஜய் தரப்பில் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K