சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே விரைவில் ஏசி ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை நகரில் ஏசி வசதி கொண்ட புறநகர் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு இணங்க, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே விரைவில் ஏசி ரயில் இயக்க மெமு ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ஏசி ரயில் இன்னும் ஒரு மாதத்தில் தொழிற்சாலையில் இருந்து தயாராகிவிடும் என்றும், ஏசி ரயிலை இயக்குவதற்கு சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தை தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சேவை செங்கல்பட்டு வரை நீடிக்கும் திட்டமும் உள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஏசி ரயிலில் பயணம் செய்ய அடிப்படை கட்டணம் 10 கிலோமீட்டர் வரை ₹29 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 500 கிலோமீட்டர் வரை பயணம் செய்ய ₹423 ஆகும் என்றும் கூறப்படுகிறது.
அநேகமாக அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ஏசி ரயில் இயக்கப்படும் அதிக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.