Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்- சட்ட ஆணையத்தின் தலைவருக்கு முதல்வர் கடிதம்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும்-  சட்ட  ஆணையத்தின் தலைவருக்கு முதல்வர் கடிதம்
, வியாழன், 13 ஜூலை 2023 (17:07 IST)
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு நீதியரசர் திரு. ரிதுராஜ் அவஸ்தி அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில்,

’’மதச்சார்பின்மை என்பது இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் முக்கிய பகுதி என்றும், அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 25-ன்படி, "ஒருவர், தான் விரும்பும் மதத்தைப் பின்பற்றுவதற்கும். கடைப்பிடிப்பதற்கும். பரப்புவதற்குமான உரிமையை" உறுதி செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அந்தந்த சமூகங்களின் பெரும்பாலான தனிப்பட்ட சட்டங்களுக்கு மத நடைமுறைகள் அடிப்படையாக உள்ளன என்றும், அத்தகைய தனிப்பட்ட சட்டங்களில் எந்த மாற்றத்தையும், மத சமூகங்களின் ஒப்புதல் இல்லாமல் செய்ய முடியாது என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். ஒரே மதத்தைப் பின்பற்றும் மக்களிடையே கூட, பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம் மற்றும் வட்டாரத்திற்கு வட்டாரம் பெரும்பாலான வேறுபடும் நிலையில், அவர்களிடையே ஒருமித்த கருத்தை எட்டாமல் அத்தகைய ஒப்புதல் சாத்தியமில்லை எனக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இதன் காரணமாகவும், மேலும் பல காரணிகளுடன், அரசியலமைப்பின் 44-வது பிரிவில் ஒரு முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள பொது சிவில் சட்டம் மீண்டும் மீண்டும் எதிர்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். தனது. 31.8.2018 நாளிட்ட அறிக்கையினை விவாதிப்பதற்காக சமீபத்தில் கூடிய இந்தியாவின் 21-வது சட்ட ஆணையமும், பொது சிவில் சட்டம் விரும்பத்தக்கது அல்ல என்று கூறியுள்ளதை நினைவுகூர்ந்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், அவசர கதியில் பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்துவது அரசியலமைப்பு சட்டநெறிமுறைகளுக்கு முரணாக அமைவதோடு மட்டுமல்லாமல் நாட்டில் வகுப்புவாத ஒற்றுமையின்மைக்கும் குழப்பத்திற்கும் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தனிநபர் சட்டங்கள் சிறுபான்மை சமூகங்களுக்கு சில பாதுகாப்பு மற்றும் உரிமைகளை வழங்குவதாகவும், பொது சிவில் சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் பழங்குடியினர் உட்பட சிறுபான்மையினரின் தனித்துவமான மத, கலாச்சார அடையாளத்தை அழித்து, செயற்கையாக ஒரேமாதிரியான பெரும்பான்மை சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியாகவே கருதுவதாக மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கலாச்சார மற்றும் மதப் பன்முகத்துவம்: வேற்றுமையில் ஒற்றுமைக்கும், கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கும் பெயர் பெற்ற நாடு இந்தியா என்றும், பொது சிவில் சட்டத்தைத் திணிக்க முயற்சிப்பதன் மூலம், இந்த பன்முகத்தன்மை புறக்கணிக்கப்படுவதோடு, நமது நாட்டின் பன்முகக் கட்டமைப்பின் சாராம்சத்தைக் குறைத்து மதிப்பிடுவதற்கு இது வழிவகுக்கும் என கவலை தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பழங்குடி சமூகங்கள் உட்பட பல்வேறு சமூகங்களின் தனித்துவமான மரபுகள். நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட சட்டங்களை மதித்து பாதுகாப்பது முக்கியம்’’ என தெரிவித்துள்ளார்.

 
 


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றும் நாளையும் கனமழை: கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!