தீபாவளியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 12ம் தேதி தீபாவளி நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதனால் ரயில், பேருந்து என அனைத்தும் முழுவதும் புக் ஆகியுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்கவும் மக்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக சென்று சேரவும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9 முதல் 11 வரை 3 நாட்களுக்கு மாநிலம் முழுவதும் வழக்கமான பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,895 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் வழக்கமாக இயங்கும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 4,675 பேருந்துகள் என மூன்று நாட்களுக்கு 10,975 பேருந்துகள் இயக்கபட உள்ளன.
தீபாவளி முடிந்து நவம்பர் 13 முதல் 15 வரை தினசரி இயங்கும் 2,100 பேருந்துகளுடன், 3,167 சிறப்பு பேருந்துகள் சேர்த்து ஒட்டு மொத்தமாக 9,467 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.