உத்தர பிரதேசத்தில் சுதந்திர தினத்தன்று வெடிக்குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதி பிடிபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஆசம்கார் மாவட்டம் முபாரக்பூர் பகுதியில் வசித்து வந்தவர் சபாஉதீன் ஆஸ்மி என்ற திலாவர் கான். வேறு சில பெயர்களலும் இவர் அழைக்கப்பட்டு வந்துள்ளார். உள்ளூர் இந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் என்ற இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார்.
சிரியாவை தலைமையாக கொண்டு இயங்கும் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த இவர், காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மீது நடந்த அராஜகங்களுக்கு பழி வாங்க வேண்டும் என மற்ற இஸ்லாமிய இளைஞர்களையும் வாட்ஸப் மூலம் தூண்டி வந்துள்ளார்.
இதுமட்டுமல்லாது பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு ஆன்லைன் மூலமாக வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியையும் அவர் மேற்கொண்டுள்ளார். அவரை கைது செய்துள்ள உத்தர பிரதேச பயங்கரவாத ஒழிப்பு படையினர், அவரிடமிருந்து சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் வெடிகுண்டு தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.