12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் இதுவரை சேர இயலாத மாணவர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நாளை நடைபெற இருப்பதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் என்பவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், 2023 - 2024ம் ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேரும் / இதுவரை கல்லூரியில் சேர இயலாத மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் 13.06.2024 அன்று காலை 10.00 மணியிலிருந்து பிற்பகல் 1.00 மணி வரை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் இருந்து கல்லுாரிகளுக்கு மாறுவது ஒவ்வொரு மாணவர்களின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான கனவாகும். மேலும், உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கல்விக் கடன்கள், உதவித்தொகை, கல்லுாரியை அணுகுவதற்கான வாய்ப்புகள் இல்லாமை போன்ற குறைகளை நிவர்த்தி செய்து மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டிட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது மாணவர்களின் எதிர்கால கனவான உயர்கல்வியை அடையவும் வெற்றி பெறவும் வழிவகை செய்யும்.
எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, உயர்கல்வியில் சேர இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Edited by Siva