17 ஆயிரம் ரூபாய் லஞ்ச கேட்ட புகாரில் காவல் நிலைய எழுத்தர் கைது
கரூரில் சாலை விபத்து தொடர்பாக வழக்கு விசாரணைக்கு 17 ஆயிரம் ரூபாய் லஞ்ச கேட்ட புகாரில் காவல் நிலைய எழுத்தர் கைது - லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை.
சேலத்தை சார்ந்த அபிஷேக் மாறன் என்பவர் தனது காரில் கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வேலாயுதம்பாளையம் அருகே சர்வீஸ் சாலையில் வந்த மற்றொரு கார் மோதியதில் எதிர் திசையில் வந்த நபர் ஒருவர் உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் காரை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் காரை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்று காரை காட்டிவிட்டு இவர்களிடம் ஒப்படைக்க காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு, காவல் நிலைய ஆய்வளர் மற்றும் தனக்கும் என 20 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார் வேலாயுதம்பாளையம் காவல் நிலைய எழுத்தரும், தலைமை காவலருமான செந்தில் குமார். ரூ 20 ஆயிரம் தன்னால் கொடுக்க முடியாது என பேரம் பேசியதில் 17 ஆயிரம் ரூபாய் பேசி முடித்து, 2 ஆயிரம் ரூபாய் முன் பணமாக பெற்றுக் கொண்டதுடன், 15 ஆயிரம் ரூபாய் பிறகு தருவதாக ஒத்துக் கொண்டனர்.
லஞ்சம் கொடுக்க மனமில்லாத அபிஷேக். கரூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு புகார் கொடுத்தார். இதனடிப்படையில் இன்று அபிஷேக் பணம் கொடுக்க முயன்ற போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.