ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வருக்கு நினைவு மண்டபம் கட்ட கூடாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் பாஜக கட்சியின் நிர்வாகி ஒருவர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்ட அனுமதிக்க கூடாது என கவர்னரிடம் மனு கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் இன்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பொதுமக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பா.ஜ.க இளைஞரணி கோட்டப் பொறுப்பாளர் சங்கர் பாண்டி என்பவர், `ஊழல்வாதியான ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவு மண்டபம் கட்டக் கூடாது. அதைத் தடுக்க வேண்டும்’ என்று மனு கொடுத்தார். இந்த மனுவை படித்து பார்த்த கவர்னர் சற்று அதிர்ச்சி அடைந்து இந்த விஷயம் குறித்து நீங்கள் சட்டரீதியாக அணுகுங்கள் என்று கூறி மனுவை அவரிடமே திருப்பி கொடுத்தார். இதனால் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முன்னதாக ஆளுனர் பன்வாரிலால் அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் நடந்த சிறப்புப் பூஜைகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.