போக்குவரத்துக் காவலரை பணிசெய்ய விடாமல் மிரட்டிய தொழிலதிபர் மகனை போலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசியபடியே வந்த வாலிபரை பணியில் இருந்த மோகன அய்யர் என்ற போலீஸ் தடுத்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், போலீஸாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் அந்த இளைஞர் போலீஸை தாக்க முயன்றார். அந்த காவலர் அய்யா வந்தால் பிரச்சனையாகி விடும் அமைதியா இரு எனக் கூறியும் அடங்காத அந்த இளைஞர் உங்க ஐய்யாக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என திமிராக பேசியுள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்த இன்ஸ்பெக்டர் இந்த இளைஞரை சமாதானப்படுத்த முயற்சித்தும் அவர் ஓவராக துள்ளியதால் அவரை கன்னத்தில் அறைந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில் அந்த வாலிபர் குமரி காலனியை சேர்ந்த பிரபல தொழில் அதிபரின் மகன் ஸ்ரீநாத் (32) என்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசாரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது, தகாத வார்த்தைகளால் பேசியது உள்பட 4 பிரிவுகளின் கீழ் ஸ்ரீநாத் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.