Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?- டாக்டர் ராமதாஸ்

பா.ம.க.வுக்கு ஒரு நீதி,  திமுகவுக்கு ஒரு நீதியா?- டாக்டர் ராமதாஸ்
, புதன், 15 நவம்பர் 2023 (12:26 IST)
பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதில் தமிழக காவல்துறை இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்வது ஏன்? என்று டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: 
 
''திமுகவின் இளைஞரணி மாநாட்டையொட்டி, அக்கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  8,647 கி.மீ நீளத்திற்கு இரு சக்கர ஊர்தி பேரணி கன்னியாகுமரியிலிருந்து இன்று தொடங்கப்பட்டுள்ளது. வரும் 27-ஆம் நாள் வரை மொத்தம் 13 நாட்கள் நடைபெறும் இந்த பேரணியில்  188 இரு சக்கர ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  ஓர் அரசியல் கட்சியின் கொள்கையை விளக்குவதற்காக இத்தகைய பேரணிகள் நடத்தப்படுவது இயல்பானது; தேவையானது. ஆனால்,  இத்தகைய பேரணிகளுக்கு அனுமதி வழங்குவதில் தமிழக காவல்துறை இரட்டை நிலைப்பாட்டை மேற்கொள்வது ஏன்? என்பது தான் எனது வினா.
 
தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற உன்னத கொள்கையை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் 5-ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில் இரு சக்கர ஊர்தி பேரணிகளை நடத்தும்படி பாட்டாளி மக்கள் கட்சியினருக்கு அழைப்பு விடுத்திருந்தேன். பேரணியில் அதிக அளவாக 50 ஊர்திகள் மட்டுமே பங்கேற்க வேண்டும்; பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் இரு சக்கர ஊர்தி பேரணி நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டிருந்தேன்.  ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி, பா.ம.க.வின்  இரு சக்கர ஊர்தி பேரணிக்கு அனுமதி மறுத்திருந்த தமிழக காவல்துறை, இப்போது  தமிழ்நாடு முழுவதும் திமுக  இரு சக்கர ஊர்தி பேரணி நடத்த அனுமதி அளித்திருக்கிறது. இது எந்த வகையில் நியாயம்?
 
ஓர் அரசியல் கட்சியின் மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் பேரணியை விட, மதுவிடமிருந்து மக்களைக் காப்பதற்காக நடத்தப்படும்  பேரணி மிகவும் முக்கியமானது. ஆனால், மதுவிலக்கு பரப்புரைக்கான பேரணிக்கு அனுமதி மறுத்துவிட்ட  காவல்துறை, இப்போது  கட்சி மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பேரணிக்கு அனுமதி வழங்கியிருப்பது எந்த வகையில் நியாயம்.  திமுகவுக்கு ஒரு நீதி... பா.ம.க.வுக்கு ஒரு நீதியா?
 
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1) மற்றும் அதன் உட்பிரிவுகளின்படி பொதுமக்கள் ஒன்று கூடவும், அமைப்பு நடத்தவும், ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லவும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இது அரசியல் கட்சிகளுக்கும் பொருந்தும். அவ்வாறு இருக்கும் போது பாட்டாளி மக்கள் கட்சியின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு மட்டும் தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.
 
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,’’ மாரத்தான் நடத்துவதற்கு அனுமதி அளிக்கும் காவல்துறை, மதுவிலக்கு குறித்து பாமக பரப்புரை செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளுங்கட்சிக்கு மட்டும் தான் காவல்துறை அனுமதி அளிக்குமா? தமிழ்நாட்டில் வருமானவரித் துறையும், அமலாக்கப் பிரிவும் சோதனை நடத்தும் போது, அவற்றை மத்திய அரசின் ஏஜென்சி என்று குற்றஞ்சாட்டும் போது,  தமிழக காவல்துறை இப்போது யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது?’’ என்று வினா எழுப்பியிருந்தது.  ஆனால், அதற்குப் பிறகும் கூட தமிழக காவல்துறையின் அணுகுமுறை மாறவில்லை.
 
தமிழக காவல்துறை அனைவருக்கும் பொதுவானது.  அனைத்து அரசியல் கட்சிகளிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.  ஆளுங்கட்சியின் கைப்பாவையாக நடந்து கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும்  பாட்டாளி மக்கள் கட்சியின் இரு சக்கர ஊர்தி பேரணிக்கு  தமிழக காவல்துறை உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை வெட்டி கொன்ற மது போதை நபரால் பரபரப்பு!