தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று கூட இருப்பதை எடுத்து நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜயகாந்த் அதில் கலந்து கொள்ள உள்ளார். இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் விஜயகாந்த் மகனுக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் சமீபத்தில் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் இன்று அவசர அவசரமாக தேமுதிக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட உள்ளது. அதுமட்டுமின்றி இந்த குழுவில் விஜயகாந்த் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கும் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு கூடுதல் பதவி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. விஜயகாந்த் மட்டும் இன்றி துணை பொதுச்செயலாளர் எல்கே சுதீஷ் உடல்நல குறைவு காரணமாக கட்சி நடவடிக்கையில் இருந்து ஒதுங்கி இருப்பதால் விஜய பிரபாகரனை முன்னிலைப்படுத்தும் திட்டம் இருப்பதாகவும் அவருக்கு முக்கிய பதவி அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் ஏற்கனவே தேமுதிக பொருளாளராக பிரேமலதா இருக்கும் நிலையில் அவருக்கும் கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பிரேமலதா மற்றும் சதீஷ் எடுத்த முடிவுகள் கட்சிக்கு பின்னடைவையே ஏற்படுத்திய நிலையில் ஒரு இளைஞரிடம் புதிய பொறுப்பை கொடுக்க தேமுதிக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.