திருநெல்வேலி அருகே பாபநாசம் திரைப்படம் போல் ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த பாபநாசம் திரைப்படத்தில், கமலின் குடும்பம் ஒருவரை கொன்று புதைத்து, பின், அந்த கொலையை மறைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பின்பு போலீஸிடமிருந்து சூட்சமமாக தப்பிப்பார்கள். ஆனால் திருநெல்வேலியை சேர்ந்த குடும்பம், இது போல் ஒரு கொலை குற்றத்தை மறைக்க முயன்று 7 ஆண்டுகள் கழித்து போலீஸில் சிக்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் தனது தோட்டத்தில் விலங்குகள் வராமல் இருக்க ஒரு மின்வேலியை அமைத்தார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த மன்னர் என்பவர், தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பக்கத்திலிருந்த பன்னீர் செல்வத்தின் வயலில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஷாக் அடித்து இறந்துள்ளார்.
பின்பு இந்த சம்பவத்தை மறைக்க பன்னீர் செல்வத்தின் குடும்பம் முடிவெடுத்தது. அதன் படி, பன்னீர் செல்வம், அவரது மனைவி பாப்பா மற்றும் மருமகன் பாலகுரு ஆகியோர் தங்களது தோட்டத்திலேயே மன்னரின் உடலை புதைத்தனர். பின்னர் இந்த விஷயம் வெளியில் தெரியாதது போல் காட்டிக்கொண்டனர்.
இதனையடுத்து மன்னரை காணவில்லை என்று அவரது மனைவி மேரி, போலீஸில் தகவல் கொடுத்ததை அடுத்து, கணவர் பற்றிய தகவல் கிடைக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திருநெல்வேலி குற்றப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு துறைக்கு அந்த வழக்கை விசாரிக்க அனுப்பப்பட்டது. இந்த வழக்கை அதிகாரிகள் விசாரித்து வந்ததில், பன்னீர் செல்வத்தின் மின் வேலியில் சிக்கி தான் மன்னர் உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தது.
இதனையடுத்து கடந்த வருடம் உடல் நிலை சரியில்லாமல் இறந்துபோன நிலையில், அவரது மனைவி பாப்பா மற்றும் மருமகன் பாலகுரு ஆகியோர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமா பானியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.