சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில் நாகரிகமும், தொழில் நுட்பமும் எவ்வளவு தான் வளர்ந்து கொண்டே போனாலும், மாறாத ஒரு கொடிய விஷயம் வரதட்சனை, வரதட்சனையின் கொடுமையால் பல பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு போகும் அவலம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் விஷ்ணுபரத்(28). இவர் ஒரு மருத்துவர். இவரது மனைவி ஷாலிலி(26). இவரும் மருத்துவர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 50 சவரன் நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் 5 லட்சம் ரூபாய் ஆகியவற்றை வரதட்சனையாக கொடுப்பதாக மாப்பிள்ளை வீட்டாரிடம், பெண் வீட்டார் கூறியுள்ளனர். ஆனால் திருமணத்தின் போது நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை மட்டும் தந்த பெண் வீட்டார், 5 லட்சம் ரூபாயை விரைவில் தருவதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்தனர்.
இதனையடுத்து திருமணமாகி 2 மாதங்களாகியும், பெண் வீட்டார் பணம் தராததால் விஷ்ணுபரத் ஷாலினியை கொடுமை படுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த ஷாலினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஷாலினியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், விஷ்ணுபரத்தின் மீது வழக்கு பதிந்து, போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.