நாளை புரட்டாசி மாதம் பிறக்க இருக்கும் நிலையில் இன்று மீன் மற்றும் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் புனிதமாக கருதப்படுகிறது என்பதும் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் நாளை புரட்டாசி மாதம் பிறக்க உள்ளதை அடுத்து இன்று அசைவம் சாப்பிடுவதற்காக பொதுமக்கள் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் குவிந்துள்ளதாக தெரிகிறது. மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் போட்டி போட்டு பல்வேறு வகையான மீன்களை வாங்கிச் சென்றனர்.
வழக்கத்தை விட இன்று சங்கரா கொடுவாய், இறால் ஆகியவை மீன்கள் விலை குறைவாக இருந்ததை அடுத்து அந்த மீன்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல் சிக்கன் மற்றும் மட்டன் கடைகளிலும் கூட்டம் குவிந்து வருவதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆவணி கடைசி நாள் என்பதால் இறைச்சி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் தெரிகிறது.
நாளை முதல் ஒரு மாதத்திற்கு பெரும்பாலான பொதுமக்கள் அசைவத்தை தவிர்ப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.